மூச்சுப்பிதுங்கி
முழி வெளியே வழிகிறபோது
பொதிகைத் தமிழின்
எதுகை மோனைகளை
எப்படி சுவைத்திட முடியும்?!
தீர்க்க வரவில்லையே யாரும்
என்றபோது
நெஞ்சு முழுவதும்
ஏதோ ஒரு பாரம்...
எந்தப் பனைக்காட்டிலும்
எங்கள் பிணக்காட்டிலும் கூட
தமிழ் வாழும்
தமிழன் நிலை தான்
சொல்லச் சிரமமாக இருக்கிறது.
பேச 'மைக்'கும்
காசு கைக்கும் கிடைக்குமெனில்
எந்தத்தம்பியும் கோவை வருவான்
சேவை செய்ய...
நல்லது
செம்மொழிக்கு மாநாடு நல்லதுதான்
வழிமொழிவதற்குத் தான்
வாய்களற்றவரானோம்.
வந்தாரை வாழவைத்தவன்
அகதிமுகாம்
வாசலிலே
இருந்தும் மலர்க்கொத்து அனுப்பிட
விருப்பம் ஆனால்
பூக்களுக்குப் பதிலாக
மண்டை ஓடுகளே
இங்கே காய்த்துத் தொங்குகின்றன.
--மட்டுவில் ஞானக்குமாரன்
1 comment:
கவிதைகள் அருமை. இவைகளை சுடச்சுட (இராணுவம் சுடசுட என்றும் வைத்துக் கொள்ளலாம்) அப்போதே படித்துவிட்டேன். இன்னும் காத்திருக்கிறேன் புதிதாக தங்கள் கவிக்கு..
Post a Comment